

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2026-27ஆம் கல்வியாண்டில் இலவச தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 30.06.2026க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி கீழ்காணும் ஆறு தொழில் பாடப்பிரிவுகளில் அளிக்கப்படுகின்றது.
வ. எண் பயிற்சி வகுப்புகள் பயிற்சி காலம் சேர்க்கை எண்ணிக்கை கல்வித் தகுதி
1. கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (Computer) 1 வருடம் 48 10ம் வகுப்பு தேர்ச்சி
2. குழாய் பொருத்துநர் (Plumber) 1 வருடம் 48 8ம் வகுப்பு தேர்ச்சி
3 பொருத்துநர் (Fitter) 2 வருடம் 20 10ம் வகுப்பு தேர்ச்சி
4. கம்மியர் மோட்டார் வாகனம் (Motor Mechanic Vehicle) 2 வருடம் 24 10ம் வகுப்பு தேர்ச்சி
5. மின்பணியாளர் (Electrician) 2 வருடம் 20 10ம் வகுப்பு தேர்ச்சி
6. எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) 2 வருடம் 24 10ம் வகுப்பு தேர்ச்சி
மொத்தம் 184
சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை நடைபெறும். இந்த பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் நிறுவனங்களின் அனுமதியை பொறுத்து, ரூ.10,500/- முதல் ரூ.15,000/- வரை உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி (Internship Training) அளிக்கப்படுகிறது.
பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களான இரண்டு செட் சீருடை, பஸ் பாஸ், புத்தகப் பை, பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கெட், மதிய உணவு, மாதந்தோறும் ரூ.750/- பயிற்சி உதவி தொகை மற்றும் தமிழ் புதல்வன், புதுமைப் பெண் அரசு நலத்திட்டத்தின்படி தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படும்.
2026-27ஆம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்ப படிவத்தினை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம் அல்லது இணையதள முகவரி www.chennaicorporation.gov.in மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து நேரடி சேர்க்கையினை பெறலாம். சேர்க்கை செய்ய கடைசி நாள் 30.06.2026 ஆகும்.
சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம்,
லாயிட்ஸ் குடியிருப்பு, முத்தையா தெரு அருகில்,
(பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம்)
இராயப்பேட்டை, சென்னை-14.
தொலைபேசி எண் : 044 – 2847 3117, 2951 5312, 70104 57571, 99413 78635
ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அல்லது எல்லோ பேஜஸ்-டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை
மேலும், மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது அசல் சான்றிதழ்களான பள்ளி மாற்று சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
2021ஆம் ஆண்டில் நேரடி தேர்ச்சி (கொரோனா) பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் 9ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை கட்டாயம் சேர்க்கையின் போது வழங்க வேண்டும். குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.