

சென்னை,
பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் (கோவை, சேலம், நெல்லை , பர்கூர், வேலூர், காரைக்குடி) மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ( கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி) பகுதி நேர (Part-Time B.E.,) பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளில் பயில பட்டய படிப்பு முடித்து குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்களிடமிருந்து (Working Professionals) இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 15 -ம் தேதி முதல் பெறப்படுகின்றன. B.E., Civil, Mechanical, EEE. ECE, CSE ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மொத்தம் 1400 இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டு முதல் (2026-2027) பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும்.
விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 0422-2590080, 9486977757 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.