

சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (BSMS, BAMS, BUMS, BHMS) ஆகிய இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட இறுதி கலந்தாய்வுக்கு நாளை (22-ந்தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கான இளநிலை ஆயுஷ் (BAMS, BSMS, BUMS, BHMS) மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான 3 சுற்று ஆன்லைன் கலந்தாய்வுகள் மற்றும் முதற்கட்ட இறுதி கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதன்பின்னரும் அரசு ஒதுக்கீடு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட இறுதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
5½ ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் 10+2 (அறிவியல் பாடப்பிரிவு) தேர்ச்சி பெற்ற மற்றும் ‘நீட்’ (NEET-UG 2026) தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் www.tnayushselection.org என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (22.11.2026) தொடங்குகிறது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் (23.11.2026) மாலை 5 மணி கடைசி நாளாகும். அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க OC, BC, BCM, MBC/DNC பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, SCA மற்றும் ST பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து பிரிவினரும் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் மற்றும் கல்வி கட்டண முன்பணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். காலியிட விவரங்கள், கலந்தாய்வு அட்டவணை மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.