

சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்கீழ் 2025-26-ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு கடந்த ஜனவரி 31-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் மதிப்பெண் விவரங்கள் கடந்த 13-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த தேர்வின் மதிப்பெண் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்கள் (500 மாணவர்கள்+500 மாணவியர்கள்) விவரங்கள் அடங்கிய தெரிவுப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.