ஜூலையில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலையில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று இன்று (மே 26) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் கட்டாயமாக தங்களது ஆதார் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் சேவை மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும்.

ஜூலையில் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) உரிய விண்ணப்ப தொகையுடன் ஜூன் 9, 10 ஆகிய நாள்களில் பள்ளியில் அல்லது சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.125, தட்கல் சிறப்பு கட்டணம் ரூ.500, இணையவழி பதிவு கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.695 செலுத்த வேண்டும். அதேவேளை, 2026-ஆம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும் தட்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500 விலக்கு அளிக்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com