

சென்னை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சுருக்கெழுத்தாளர் 'சி', 'டி' நிலையிலான பணியிடங்களுக்குரிய தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை https://ssc.gov.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது மைஎஸ்எஸ்சி செயலி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 15-ந்தேதியும், ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கு வருகிற 16ந் தேதியும் கடைசி நாள் ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த மண்டலத்துக்கு உட்பட்ட 26 மையங்கள் தேர்வு நடைபெறும். ஆந்திராவில் 12 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 9 மையங்களிலும், தெலுங்கானாவில் 4 மையங்களிலும் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. பதவியின் விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம் ஆகியவை பற்றிய தகவல்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.