ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை அமைப்பு (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற இருக்கிறது.

ஆசிரியர்கள் இந்த இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். கணவன்-மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பணிபுரியும் அலுவலகம், பள்ளிக்கல்வி அரசு மற்றும் அரசு துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா? என்ற விவரத்தையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிலோமீட்டர் மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். பொது மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான கால அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com