

சென்னை,
சென்னை பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் பணி - தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.என, மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சமூகவியல் (Sociology) அல்லது உளவியல் (Psychology) பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், மனநல நிறுவனங்கள் அல்லது சமுதாய சேவை மையங்களில் ஆலோசகராக பணியாற்றிய முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பொது வகுப்பினருக்கான இந்த பணியிடத்திற்கு 1.7.2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 32 வயதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, முன்அனுபவ சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை "சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, சென்னை - 66" என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் (30.11.2026) அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.