

சேலம்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பெரியார் தொலைநிலைக்கல்வி நிறுவனம் தற்போது தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தொழிற்சாலைப் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களின் படிப்புக்காலம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தங்களது அரியருக்கு உரிய தேர்வை எழுதுவதற்காக சிறப்பு தேர்வு நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பாடத்திட்டத்திலேயே அரியர் தேர்வுகளை எழுதலாம் என்றும், சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் சிறப்புக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்தாளிற்கும் ரூ.2 ஆயிரம் சேர்த்துச் செலுத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மாதம் 15-ந் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வலைத்தளமான www.periyaruniversity.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தெரிவித்துள்ளது.