

சென்னை,
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ந்தேதி(இன்று) தொடங்கி, 5-ந்தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 28,979 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில், சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 9,316 மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இதில் ஜெனரல் ரேங்க் 37,1977 முதல் 1,31,093 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ந்தேதி(இன்று) தொடங்கி, 5-ந்தேதி(நாளை மறுநாள்) மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.