என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வம்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2½ லட்சத்தை கடந்தது

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகும்.
Image Credits: AI
Image Credits: AI
Published on

சென்னை,

2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 3-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் 8,500 விண்ணப்பப் பதிவு வந்த நிலையில், அதன் பின்னர் தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரை விண்ணப்பங்கள் வந்து குவிந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 23-வது நாளாக நேற்றும் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. அந்த வகையில் நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 2 லட்சத்து 51 ஆயிரத்து 796 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன.

விண்ணப்பங்கள் இந்த எண்ணிக்கையில் பெறப்பட்டாலும், அதில் விண்ணப்ப கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டுமே விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையாக கணக்கில் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பப் பதிவில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 478 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி ஆகும்.

இதேபோல், தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு www.tngasa.in என்ற இணையதளத்தில் தொடங்கி நடந்து வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகும். ஏற்கனவே வருகிற 29-ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் 2, 3-ந்தேதிகளில் வெளியிடப்பட்டு 5-ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com