

சென்னை,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் பயிற்சியும், மேலாண்மை தகவல் அமைப்பு தரவு பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர் பயிற்சியும், மென் பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர், காப்பீட்டு முகவர் போன்ற பயிற்சிகள் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் இணைந்து வழங்கப்படவுள்ளன என ஆதிதிராவிடர் நல இயக்குநர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, வெற்றிப்படி திட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் (ICT Academy) சென்னை மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் (Junior Software Developer), இணையதள உருவாக்குநர் (Web Developer) மற்றும் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் (Application Developer) பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் (Junior Software Developer), இணையதள உருவாக்குநர் (Web Developer), பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் (Application Developer), மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர் (MIS Data Analyst), நுண்நிதி நிர்வாக அலுவலர் (Microfinance Executive) மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும் (Insurance Agent), மதுரை மாவட்டத்தில், மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர்(MIS Data Analyst), மென் பொருள் வடிவமைப்பாளர் (Software Programmer), நுண்நிதி நிர்வாக அலுவலர் (Microfinance Executive) மற்றும் காப்பீட்டு முகவர் (Insurance Agent) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மென் பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி சார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் இணையதளமான (www.tnadw.tn.gov.in) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆதிதிராவிடர் நல இயக்குநர் (மு.கூ.பொ.) செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.