டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டி

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குரூப் 2, 2ஏ தேர்வில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டி
Published on

சென்னை,

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. முதலில் 645 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதினார்கள். இந்த நிலையில் தற்போது கூடுதல் பணியிடங்களை சேர்த்து அது தொடர்பான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரூப்-2, 2ஏ பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 625 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-2 காலிப்பணியிடங்கள் நிதியாண்டுக்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் வீதம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டு குரூப்-2 பணியிடங்கள் 1,270 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு துறை, நிறுவனங்களிடம் இருந்து மேலும் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்னதாக அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையின்படி, அதற்கான தேர்வு எழுத போட்டியிட்டவர்களை ஒப்பிடும்போது, ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி போட்டனர். தற்போது கூடுதல் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டியிடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com