

குளித்தலை
பிரிவு சாலை
குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் பகுதிக்கு செல்லும் பிரிவு சாலை கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பிரிவு சாலை குமாரமங்கலம், நடுப்பட்டி, பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, சிவாயம் போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலையாக மட்டுமல்லாது குளித்தலை - மணப்பாறை சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையாகவும் உள்ளது. அதுபோல குமாரமங்கலம், ஆரியம்பட்டி வழியாக பெட்டவாய்த்தலைக்கு செல்லவும், பொய்யாமணி, நங்கவரம், நெய்தலூர் காலனி, காவல்காரன்பட்டி வரை செல்லவும், மேலும் இனுங்கூர், நச்சலூர் போன்ற பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லவும் இச்சாலை பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த சாலை வழியாக தினந்தோறும் அரசு பஸ் முதல், கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் பயனித்து வருகின்றனர். லாரி, லோடு வேன் போன்ற வாகனங்களும் சென்று வருகின்றன. பல்வேறு தரப்பினும் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையாக உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்தநிலையில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குமாரமங்கலம் செல்லும் இந்த பிரிவு சாலை பகுதியில் எந்தவிதமான மின் விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பிரிவு சாலை பகுதி இருளில் மூழ்கிய நிலையிலேயே உள்ளது. இப்பகுதி இருட்டாக இருப்பதால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குமாரமங்கலம் பிரிவு சாலைக்கோ அல்லது குமாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் பலரும் விபத்துக்குள்ளாகின்றனர்.
அதுபோல இருட்டான இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள காரணத்தால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாக நடந்தோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ பயனிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே இப்பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே விபத்துக்களை தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி செல்லவும் குமாரமங்கலம் பிரிவு சாலை பகுதியில், மின்சாரம் மூலமோ, சோலார் முறை மூலமாகவோ மின்விளக்கு வசதி ஏற்படுத்த சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
குளித்தலை வடக்கு மடவாளத் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் குறுகிய சந்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் உள்ள சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து வலுவிழந்த நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் பெரும்பாலும் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள வீடுகளில் செல்லும் மின் இணைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் இந்த மின் கம்பத்தில் ஏறி அந்த பழுதுகளை சரி பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப் படுவதோடு, மின் கம்பிகள் இப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழும் அபாய நிலை உள்ளது.
மேலும் குறுகிய வழியில் இந்த மின்கம்பம் இருப்பதால் இந்த வழியாக செல்வோருக்கு போதிய இட வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் சேதமடைந்த இந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே உடனடியாக சேதமடைந்த நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை மாற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து புதிய மின் கம்பம் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.