

செந்துறை:
எலக்ட்ரீசியன்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ரமேஷ் (வயது 36). எலக்ட்ரீசியனான இவர் பொன்பரப்பி ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தெரு மின்விளக்குகளை சீரமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
அப்போது மின்கம்பத்தில் சாய்த்து வைக்கப்பட்ட ஏணியில் ஏறி அவர் பணியில் ஈடுபட்டபோது மின்கம்பத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். அவரது உடல் தொங்கிய நிலையில் இருந்தது.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இழப்பீடு கேட்டு பொன்பரப்பியில் உள்ள சாலையில் ரமேசின் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.