

ராமநாதபுரம்,
சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் அனைவரும் மனித சங்கிலி ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி சாத்தான்குளம் ஊராட்சி சாலையில் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.
முன்னதாக மாணவ-மாணவிகள் அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள் சாம்ராஜ், கதிர்மணி, வத்சலா தேவி, புனித ராணி, யமுனா, சுமதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கனிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு உதவி தலைமை ஆசிரியர் சுவாமிதாஸ் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் சாந்தி வரவேற்று பேசினார். ஆசிரியர் திருமூர்த்தி பெண் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து ஆசிரியர் ஜெரோம் பேசினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஜெரோம் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் யமுனா நன்றி கூறினார்.