மாலை நேர மேக்கப்

மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
மாலை நேர மேக்கப்
Published on

ழகுக்கு அழகு சேர்ப்பது போல, ஒருவரது தோற்றத்தை மெருகூட்டி காட்டுவது 'மேக்கப்'. முக அமைப்பு, சரும நிறம் மட்டுமில்லாமல் காலை, மாலை, வெயில், மழை போன்ற கால நேரங்களையும் மேக்கப் போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலை நேரத்தில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விருப்பத்துக்கேற்ற மேக்கப் போட்டுக்கொள்ளலாம். மாலை நேரங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் அதிக வெளிச்சம் தருவதற்காக பெரிய மின்விளக்குகள் பயன்படுத்தப்படும். இவை அதிக வெப்பத்தை வெளியிடுவதால், எளிதாக உருகி வழியாதவாறு மாலை நேர மேக்கப் போட வேண்டும்.

எந்த வகையான மேக்கப் போடுவதற்கு முன்பும், முகத்தை அதற்கேற்றவாறு தயார் செய்வது முக்கியம். மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம். எனவே முகத்தை நன்றாகக் கழுவி, ஸ்கிரப் செய்து, மாய்ஸ்சுரைசர் பூசிய பின்பு அதன் மேல் மேக்கப் போடுவது நல்லது. இதனால் அழகு சாதனப் பொருட்கள், சருமம் முழுவதும் சீராகப் படர்ந்து சிறந்த பினிஷிங் கிடைக்கும்.

மேக்கப்பின் முதல் படியாக பிரைமர் பயன்படுத்த வேண்டும். இது இரவு விளக்குகளின் வெப்பத்தால் உருகாமல், மேக்கப் வெகு நேரம் நீடித்திருக்க துணைபுரியும்.

இரவு நேர மேக்கப்பிற்கு பவுண்டேஷனை தவிர்த்து, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவற்றை மறைக்க கன்சீலர், முகத்தின் வடிவை மேம்படுத்திக்காட்ட கான்டூர் மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதிகமான பொருட்களைப் பயன்படுத்துவது, மேக்கப் உருகுவதற்கு வழிவகுக்கும்.

நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது முக்கியம். மினுமினுப்பான உடை அணியும்போது லேசான மேக்கப் போடுவது சிறந்தது. சாதாரண உடை அணிந்தால் பளிச் என்ற மேக்கப் பொருத்தமாக இருக்கும்.

உதடுகளில் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், கண்களில் குறைவாக மேக்கப் போடுவது பொருத்தமாக இருக்கும். கண்களுக்கு அதிக மேக்கப் போடும்போது, உதடுகளில் லேசான நிறம் கொண்ட லிப்ஸ்டிக் போடுவது நன்றாக இருக்கும்.

இரவுநேரத்தில் மின்விளக்கு வெளிச்சம் முகத்தில் பட்டு அதிகமாக பிரதிபலிப்பதால், கன்னம், மேல் உதடு மற்றும் புருவ வளைவு போன்ற இடங்களில் சிறிது ஹைலைட்டர் பயன்படுத்துவது அந்தப் பகுதிகளை அழகாகவும், எடுப்பாகவும் காட்டும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com