கண்கள்-வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கண்கள்-வாயில் கருப்பு துணியை கட்டி திண்டுக்கல்லில் மவுன போராட்டம் நடந்தது.
கண்கள்-வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம்
Published on

திண்டுக்கல்,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள், தொடர் போராட்டம் நடத்தினர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காந்திய மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மவுன போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் முனிசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் உமாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் குருவம்மாள், தமிழ்நாடு காந்தி மன்ற இயக்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அப்போது துப்பாக்கி சூட்டை கண்டிக்கும் வகையில் அனைவரும் கண்கள், வாயை கருப்பு துணியால் கட்டி கொண்டு மவுனமாக இருந்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதே போல் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் அந்தோணி, மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, அமைப்பு செயலாளர் சுரேஷ், பொருளாளர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com