போலி பத்திரம் தயாரித்து சொத்து அபகரிப்பு: போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

போலி பத்திரம் தயாரித்து சொத்தை அபகரித்து கொண்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலி பத்திரம் தயாரித்து சொத்து அபகரிப்பு: போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

ஈரோடு,

கோபி அருகே உள்ள அருவங்காட்டூரை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 47). இவர் தன்னுடைய மகன் நாகேந்திரகுமார் என்பவருடன் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் காளீஸ்வரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி தீவைக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர். உடனே காளீஸ்வரி, தனது மகனுடன் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் காளீஸ்வரியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கூறியதாவது:

நானும், எனது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டோம். அதன் பின்னர் நான் எனது மகனுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் எங்கள் ஊரை சேர்ந்த போலீஸ்காரர் முருகேசன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக கடந்த 2004ம் ஆண்டு எனது கணவரின் மோட்டார்சைக்கிளை முருகேசன் எடுத்துக்கொண்டார்.

மேலும் அவர் என்னை மிரட்டி, ரூ.20 ஆயிரமும் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து எனக்கு தெரியாமல் என்னுடைய கணவரின் கையெழுத்தை போலியாக போட்டு எங்களின் வீடு, நிலம் போன்ற சொத்துகளையும் முருகேசன் அபகரித்துக்கொண்டார்.

தற்போது நான் குடியிருந்து வரும் வீட்டை காலிசெய்யும்படி அவர் மிரட்டி வருகிறார். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு போலீசாரிடம் காளீஸ்வரி கூறினார்.

அதைத்தொடர்ந்து காளீஸ்வரி தான் கொண்டு வந்த புகார் மனுவை, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு சென்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், போலி பத்திரம் தயாரித்து எனது சொத்துகளை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் என் உயிருக்கும், எனது மகன் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com