குடும்பத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

வேப்பந்தட்டை அருகே குடும்பத்தகராறில் விவசாயியை அடித்துக்கொன்றதாக, அவருடைய மனைவி மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
Published on

வேப்பந்தட்டை:

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 40). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான வேலுசாமி மகள் அம்சவள்ளிக்கும்(24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அம்சவள்ளி அவ்வப்போது கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இதனால் ராமமூர்த்திக்கும், வேலுசாமிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கொலை

நேற்று அம்சவள்ளியும், வேலுசாமியும் மாடுகளை ஓட்டிக்கொண்டு ராமமூர்த்தி வயல் வழியாக சென்றுள்ளனர். அப்போது ராமமூர்த்தி, எனது வயல் வழியாக எதற்காக மாடுகளை ஓட்டி வருகிறீர்கள்? என்று கேட்டு வேலுசாமியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

தகராறு முற்றிய நிலையில் வேலுசாமியும், அம்சவள்ளியும் சேர்ந்து ராமமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். வி.களத்தூர் போலீசார், ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அம்சவள்ளி, வேலுசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாலிகட்டிய கணவனை தந்தையுடன் சேர்ந்து பெண் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com