நிலக்கடலையை பாதுகாக்க விவசாயி கையாண்ட புதுமை

நிலக்கடலை, பீன்ஸ், கரும்பு போன்ற பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.
நிலக்கடலையை பாதுகாக்க விவசாயி கையாண்ட புதுமை
Published on

பயிர்களை காக்க வயல்களில் மின் வேலி அமைப்பது சட்டவிரோதமானது. அதில் சிக்கி விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சில இடங்களில் மின் வேலியில் சிக்கி வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இந்தநிலையில் குஜராத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வன விலங்குகளை விரட்டுவதற்கு புதுமையான கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். காலியான எண்ணெய் கேன்களை பயன்படுத்தி அந்த கருவியை உருவாக்கி இருப்பதுதான் சிறப்பம்சம். எண்ணெய் கேனின் இரு பகுதிகளையும் வெட்டி எடுத்துவிட்டு அதனுள் பேட்டரி ஒன்றை நிறுவி இருக்கிறார்.

அதனுடன் சுழலும் மினி பேனும், மின் விளக்கும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த பேன் சுழலும்போது மின் விளக்கின் வெளிச்சம் அதன் மீது பட்டு எதிரொலிக்கிறது. அதனால் வயலின் நான்கு மூலைகளுக்கும் வெளிச்சம் ஊருருவி செல்கிறது. அந்த வெளிச்சம் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதால் அவை வயலுக்குள் நுழையாமல் திரும்பி செல்கின்றன.

இந்த புதுமையான கருவியை தனது வயலில் நிறுவி இருப்பவர், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்திலுள்ள கட்சலை கிராமத்தை சேர்ந்த விஹாபாய் மெசூரியா. இவர் 10 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மற்றும் சோயாபீன்ஸ் சாகுபடி செய்திருக்கிறார். இந்த பயிர்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை கூடுதல் பராமரிப்பு தேவை.

குறிப்பாக காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டார். ஆரம்பத்தில் சாதாரண கம்பி வேலி அமைத்திருந்தார். அதன் வழியே ஊருடுவி காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்தது. இதற்கு நிலையான தீர்வு கண்டுபிடிக்க முடிவு செய்தவர் எண்ணெய் கேனை கொண்டு குறைந்த செலவிலேயே பயிர் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டார். அவரது புதுமையான இந்த முயற்சி விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தங்கள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி தோற்றம் கொண்ட ஆடைகளை அணிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு கரடி ஆடை வாங்குவதற்கு விவசாயிகள் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவளிக்கும் நிலை இருக்கிறது. குஜராத் விவசாயியின் பயிர் பாதுகாப்பு முயற்சி செலவு குறைந்ததாக இருப்பதால் பலரும் அவரை பாராட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com