ராமநகர் மாவட்ட பெயரை மாற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம்; குமாரசாமி எச்சரிக்கை

ராமநகர் மாவட்ட பெயரை மாற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநகர் மாவட்ட பெயரை மாற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம்; குமாரசாமி எச்சரிக்கை
Published on

பெங்களூரு:

ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று பெயர் மாற்ற திட்டமிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதற்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தபோது, எனக்கு உரிய மரியாதை வழங்காமல் கைப்பாவையாக பயன்படுத்தி கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கோரிக்கைகளை கடிதத்தில் எழுதி எனது மேசை மீது தூக்கி எறிந்தனர். அத்தகைய கட்சியின் முதல்-மந்திரியாக உள்ள சித்தராமையா என்னை வில்லன் என்று கூறுகிறார். எனது தலைமையில் இருந்த கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது சித்தராமையாவே.

இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சட்டசபையில் கூட்டணி ஆட்சியை பா.ஜனதாவினர் கவிழ்த்ததாக கூறினேன். அதற்கு விதை போட்டவர் சித்தராமையா. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை சித்தராமையா தான் மந்திரி ஆக்கினார். பி.சி.பட்டீலை மந்திரி ஆக்குமாறு நான் கூறினேன். அதை அவர் கேட்கவில்லை. பெலகாவியில் அரசியல் குழப்பத்தை சரிசெய்யுமாறு சித்தராமையாவிடம் கூறினேன். அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

அதனால் ரமேஷ் ஜார்கிகோளி பா.ஜனதாவுக்கு சென்றார். எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஆர்.சங்கர், ஸ்ரீமந்த் பட்டீல் ஆகியோரை ரெசார்ட் ஓட்டலில் இருந்து பா.ஜனதாவுக்கு அனுப்பியது சித்தராமையா தான். 14 மாதங்கள் என்னை முதல்-மந்திரியாக நீடிக்க அனுமதித்த சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் அறிவிக்கிறது. இந்த திட்டங்களை மக்கள் வெறுக்கிறார்கள். அதனால் ராஜஸ்தானில் உதவித்தொகையை குறைத்துவிட்டனர்.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசு பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்ய தயார். தேர்தலில் எங்கள் வீட்டு பணத்தை செலவு செய்யவில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். எங்களின் பணியை பார்த்து சிலர் கட்சிக்கு நன்கொடை வழங்கினர். அந்த பணத்தில் கட்சியை வலுப்படுத்தியுள்ளேன். நாங்கள் பாவத்தின் பணத்தில் செலவு செய்யவில்லை.

ராமநகரின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை நான் ஒரு சவாலாக எடுத்துள்ளேன். ராமநகருடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. அங்கு தொழில் ரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஒருவேளை ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றினால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். அந்த மாவட்ட விஷயத்தில் எனக்கு கனவு உள்ளது. அதற்காக சவாலை நான் எதிர்கொள்கிறேன். கடைசி வரை ராமநகர் மாவட்டத்தின் பெருமையை காக்க போராடுவேன்.

கனகபுரா வளர்ச்சி குறித்து பகிரங்க சவாலை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். சித்தராமையாவுக்கு நான் அரசியல் ரீதியாக வில்லன் தான். அவருக்கு நண்பராக முடியுமா?.

ஏனெனில் சமரசம் செய்து கொள்ளாமல் சித்தராமையா ஆட்சியின் தவறுகளை மக்களிடம் கொண்டு வருகிறேன். அதனால் அவருக்கு நான் வில்லன் தான்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com