ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2-வது மரண தண்டனை அறிவிப்பு


ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2-வது மரண தண்டனை அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:23 PM GMT (Updated: 16 Nov 2022 12:32 PM GMT)

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, இன்று மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரான்,

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கடந்த செப்டம்பர் மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண், மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 185 பேர் பலியாகி விட்டதாகவும், இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, இன்று மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து ஈரானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story