

வாணியம்பாடி,
வாணியம்பாடியிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் வழியில் கொல்லகுப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊரை சுற்றியுள்ள பகுதி காடுகளாக உள்ளன. இங்கு அவ்வப்போது மலைப்பாம்புகளின் நடமாட்டம் உள்ளது. நேற்று காலை இதே பகுதியில் உள்ள அஜீத் என்பவரின் கிணற்றின் அருகே 2 மலைப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கொண்டிருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதனை வேடிக்கை பார்ப்பதற்காக திரண்டனர்.
அப்போது திடீரென அந்த 2 பாம்புகளும் அஜீத்தின் கிணற்றுக்குள் விழுந்து விட்டன. இது குறித்து வேடிக்கை பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்சிங் (பொறுப்பு), லோகநாதன் தலைமையில் வீரர்கள் அங்கு வந்தனர். அவர்களில் வீரர்கள் மகபூப்பேக், சிவகுமார் ஆகியோர் கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கியவாறு 2 மலைப்பாம்புகளையும் லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர். அதிக எடையுடன் இருந்த மலைப்பாம்புகள் ஒவ்வொன்றும் 8 அடி நீளம் வரை இருந்தன. இந்த நிலையில் அங்கு வந்த வன அலுவலர் பெருமாளிடம் அந்த மலைப்பாம்புகளையும் தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.