

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்களிலும் தண்ணீர் வறண்டு வருகிறது. இதை பயன்படுத்தி ஏற்கனவே மழைக்காலங்களில் வாங்கிவிடப்பட்ட மீன் குஞ்சுகள் தற்போது மீன்பிடிக்கும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் இந்த கண்மாயில் மழைக்காலங்களில் கண்மாய் நிரம்பிய நிலையில் விவசாய பணி நடைபெற்று நிறைவு பெற்றதும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு தற்போது விவசாய பணிகள் முடிவடைந்ததால் ஊர்குளத்தான்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
கமகமத்த மீன் வாசனை
முன்னதாக அதிகாலை முதல் ஊர்குளத்தான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் அதிகாலை முதலே மீன்பிடிக்க வலை மற்றும் ஊத்தா கூடை ஆகியவற்றுடன் கண்மாயில் குவிந்தனர். அதன் பின்னர் மீன்பிடிக்க கிராம முக்கியஸ்தர் கொடியசைத்ததும் அங்கு காத்திருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடி சாதனங்களுடன் மீன் பிடிக்க தொடங்கினர்.
இதையடுத்து அவர்களின் வலை மற்றும் ஊத்தா கூடையில் குரவை, விரா, கட்லா, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட ஏராள மான மீன்கள் கிடைத்தன. இதையடுத்து கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களை அள்ளிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் மீன்வாசனை கமகமத்தது.