விடுதலை தந்த சுதந்திர தினம்

இந்தியச் சுதந்திரப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆகஸ்டு 15-ந் தேதி வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதியப்பட்ட நாள்.
விடுதலை தந்த சுதந்திர தினம்
Published on

இந்தியாவில் ஆங்கிலேயர்களை விரட்ட தலைவர்கள் துணிச்சலுடன் களம் கண்டனர். வீரர்கள் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும் செய்தனர். பல வெற்றியும், கண்டனர். பலர் இன்னுயிர் ஈந்தனர். இத்தகைய நெடிய கடுமையான போராட்டத்திற்கு பின்னர் விடுதலை பெற்று சுதந்திர காற்றை நாம் சுவாசித்த நாளே ஆகஸ்டு-15 ஆகும்.

தாய்நாடு

அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி விமரிசையுடனும், சிரத்தையுடனும் நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதில் உயிரை தியாகம் செய்த சுதந்திர போராளிகளின் அனைத்து தியாகங்களையும் நினைவுபடுத்துகிறோம். அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதயநாள் மற்றும் ஒரு புதிய புரட்சியின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது. சுதந்திரத்திற்குப் பிறகு, நம் சொந்த நாட்டில், நமது தாய்நாட்டில் அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைத்தன. எல்லோரும் ஒரு இந்தியராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சுதந்திர போராளிகள்

ஆங்கிலேய ஆட்சியின்போது, நமது மூதாதையர்களையும், முற்பிதாக்களையும் மிக கொடூரமாக நடத்தினார்கள். சுதந்திர போராட்டக்காரர்கள் பல தியாகங்களை செய்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தனர். பல சுதந்திர போராளிகள், சுதந்திரத்தை பெற தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தனர்.

பகத்சிங், லாலா லஜபதிராய், ராணி லட்சுமிபாய், சந்திரசேகர், ஆசாத், பாலகங்காதர திலகர், வல்லபாய் படேல், மங்கல் பாண்டே, சரோஜினி நாயுடு இன்னும் பலர் நாட்டிற்காக தங்கள் வாழ்வை இழந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மகாத்மா காந்தியின் அனைத்து போராட்டங்களையும் எப்படி நாம் மறக்க முடியும்.

பெரிய நாடு

காந்தியடிகள் 1930-ம் ஆண்டில் தண்டி யாத்திரை எனப்படும் உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார். 1940-ல் தனிநபர் சத்தியாக்கிரகம் மற்றும் 1942-ல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. அனைத்து போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி போல் இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திர தேசமானது.

இன்று இந்தியா உலக அரங்கில் பெரிய நாடாக திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் அவர்களின் தியாகமே. எனவே நம் நாட்டை இன்னும் முன்னேற்ற மாணவர்களாகிய நாமும் அவர்கள் வழிநடப்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com