புண்ணியம் தரும் அமாவாசை வழிபாடு

இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவம் என்னும் பாக்ய ஸ்தானத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறது.
புண்ணியம் தரும் அமாவாசை வழிபாடு
Published on

அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.

பித்ருக்கள் என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.

இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வு கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்யாதது தான்.

இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.

முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு பித்ரு தோஷம் ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை விட்டுச் செல்லக்கூடாது.

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.

மஹோதய புண்ணிய காலம்

வருகிற 4-ந் தேதி வரும் தை அமாவாசை மஹோதய புண்ணிய காலம் ஆகும். மஹோதய புண்ணிய காலம், 60 வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும். அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும், அமாவாசையின் முதல் பாகமும், திருவோண நட்சத்திரமும் ஒரு சேரக் கிடைப்பது மிகவும் விசேஷமாகும். அன்றைய தினம் சூரிய உதயத்திற்கு முன்பாக, கடற்கரை, நதி, ஆறு, குளம், கிணறு பகுதிகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து அந்தணர்களுக்கு தானம் தரும் பொருட்களில் பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம், ஆடை தானம் வழங்கலாம்.

இதுவரை பித்ருக்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யாதவர்கள் கூட, தை அமாவாசையில் அதைச் செய்து அளவிட முடியாத பலனைப் பெறலாம். தை அமாவாசை என்பது கோடி சூரிய கிரகணத்திற்கு சமமாகும். நீர்நிலைக்கு சென்று தர்ப் பணம் செய்ய முடியாதவர்கள், பெண்கள் ஆகியோர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தந்து வீட்டிலோ, சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.

அமாவாசையும் அரசமரமும்

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை அமாசோமவாரம் என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. இதனை அஸ்வத்த பிரதம்சணம் என்பர். அஸ்வத்தம் என்பதற்கு அரச மரம் என்று பொருள். மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். அரச மரத்தை வணங்குபவர்களின் பாவம், நோய்கள் நீங்கும். அரச மரத்தை மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்கும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.

- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com