

கயத்தாறு:
கயத்தாறில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மதியம் மதிய உணவுவேளையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி வட்ட கிளையான கயத்தாறில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட துணைத்தலைவர் பிரான்சிஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மாவட்ட பொருளாளர் சுப்பையா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் மாரியம்மாள், வட்டார செயலாளர் செல்லத்துரை, வட்டார பொருளாளர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் ஆனந்தன், முத்து கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.