டிப்டாப் உடையுடன் மாடுகளை ஓட்டிச்சென்ற பட்டதாரிகள்

கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணலில் டிப்-டாப் உடையுடன் மாடுகளை பட்டதாரிகள் ஓட்டிச்சென்று காண்பித்தனர். இதில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டிப்டாப் உடையுடன் மாடுகளை ஓட்டிச்சென்ற பட்டதாரிகள்
Published on

வேலூர்

கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணலில் டிப்-டாப் உடையுடன் மாடுகளை பட்டதாரிகள் ஓட்டிச்சென்று காண்பித்தனர். இதில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கால்நடை உதவியாளர் பணி

வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

22 பதவிகளுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

முதல் நாளான இன்று 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 400 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 400 பேருக்கும் என 2 வேளையாக நடைபெற்றது.

இந்த நேர்காணல் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது.

வேலூர் கலால் உதவி ஆணையர் வெங்கட்ராமன், கால்நடைத்துறை வேலூர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. காலை முதலே விண்ணப்பதாரர்கள் அங்கு வந்திருந்தனர்.

அங்கு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து சைக்கிள் ஓட்டும் திறன், மாடுகளை கையாளுதல் திறன் ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேர்முகத்தேர்வும் நடந்தது.

பட்டதாரிகள் பங்கேற்பு

இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு அடிப்படை தகுதியாகும். ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். அதிலும் குறிப்பாக முதுநிலை பட்டதாரிகள், எம்.பி.ஏ. பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் போன்றவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

மாடுகளை கையாளும் திறன் தேர்வில் பங்குபெற்று மாடுகளை சிறிது தூரம் அழைத்து சென்று பின்னர் மரத்தில் கயிற்றால் கட்ட வேண்டும்.

இந்த தேர்வில் டிப்-டாப் உடை அணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் டிப்-டாப் உடை, காலில் ஷூ'வுடன் சென்று கயிற்றை அவிழ்த்து மாடுகளை லாவகமாக ஓட்டிச்சென்று காண்பித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.

இதேபோல ஏராளமான இளம்பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அவர்களும் மாடுகளை கையாண்டும், சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com