புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

முருங்கப்பாக்கத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணியால் புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

புதுச்சேரி

முருங்கப்பாக்கத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணியால் புதுவை-கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடிநீர் குழாய் உடைப்பு

புதுச்சேரி-கடலூர் சாலையில் முருங்கப்பாக்கத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் எதிரே நேற்று  நள்ளிரவில் சாலையின் அடியில் சென்ற குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டது. வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம் உருவானது. இது பற்றிய தகவல் அறிந்தவுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் குழாயில் செல்லும் தண்ணீரை நிறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் முன்பு ஒருவழிப்பாதையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து மாற்றியமைப்பு

முருங்கப்பாக்கத்தில் இருந்து கடலூர் சாலையில் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

இதனை தொடர்ந்து புதுவை-கடலூர் சாலையில் போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். அதன்படி புதுவையில் இருந்து கடலூர் செல்லும் கனரக வாகனங்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை, விழுப்புரம் சாலை, வில்லியனூர் வழியாக திருப்பி விடப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இதே போல் கடலூரில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனூர் வழியாக புதுச்சேரி திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை தோண்டி உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்தனர். மேலும் சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்லும் வகையில் வழிவகை செய்தனர்.

இதனைதொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு பிறகு வழக்கம்போல் மீண்டும் கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com