

கரூர்,
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் நிரப்பக்கூடாது என்பது தொடர்பான பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் பேசும்போது கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் காலை, மாலை என இரு வேளைகளிலும் 76 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வாகன ஓட்டிகள் 2 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கக்கூடிய செய்தியாகும்.
கட்டாய விடுப்பு
கரூர் மாவட்டம் சாலை விபத்தில் இறப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது நாம் பெருமைப்படக்கூடிய செய்தி அல்ல. அரசு அலுவலர்கள் ஹெல்மெட் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணிந்து வராதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு அதன்மூலம் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக கண்டிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்துதான் ஆக வேண்டும். அவர்களிடம் பணியாளர்கள் அன்புடன் எடுத்துக்கூறி ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் உங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும் என்பதை எடுத்துக்கூற வேண்டும். மேலும், பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா? என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.
76 இடங்களில் ஆய்வு
மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள 76 இடங்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன சட்டப்படி போலீசார் நடவடிக்கை மேற்கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் பணியால் ஒரு விபத்து தடுக்கப்பட்டு ஒரு உயிர் காப்பாற்றப்படுவது நமது கடமையாகும்.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வரும்போது பெட்ரோல் நிரப்புவதை தவிர்த்து இந்த இயக்கம் வெற்றியடைய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.