சருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்

நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
சருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
Published on

ரும பராமரிப்பு என்பது அழகைத் தாண்டி ஆரோக்கியத்தை பிரதிபலிப்பதாகும். வயது அதிகரிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தால், சருமம் தனது பொலிவை இழக்க நேரிடலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், சோர்வு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் இளம் வயதிலேயே பலருக்கும் வயதான தோற்றம் வந்துவிடுகிறது.

ஈரப்பதமும், நெகிழ்வுத்தன்மையும் சருமம் இளமையாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும். 'கொலாஜென்' எனும் புரதம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு அடிப்படையாக உள்ளது. இது இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகிறது. வயது அதிகரிக்கும்போது உடலில் கொலாஜென் உற்பத்தி குறையத்தொடங்கும். இதன் காரணமாகவே சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வறட்சி ஏற்பட்டு, பொலிவு குறைந்து முதுமையான தோற்றம் எட்டிப் பார்க்கிறது.

நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன. அதைப் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

துளசி:

அனைவருக்கும் தெரிந்த மூலிகைப் பொருட்களுள் ஒன்று துளசி. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் சருமத்தை பாதிக்கும் பிரீ-ரேடிக்கல்களை கட்டுப்படுத்தி, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். 10 முதல் 20 துளசி இலைகளை வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து விழுதாக அரைக்கவும். இதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.

மஞ்சள்:

பெண்களின் சரும பராமரிப்பில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இதன் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாதிக்கின்ற நுண்ணுயிரிகளை அழிக்கும். பருக்கள் மற்றும் அவற்றால் உண்டாகும் தழும்புகளை குணப்படுத்தும். சருமம் இளமையாக இருக்க, மஞ்சளை பால் அல்லது தயிருடன் கலந்து முகத்தில் பூசி வரலாம்.

லவங்கப்பட்டை:

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மிருதுவாக்கக்கூடியது லவங்கப்பட்டை. இதில் உள்ள ஆன்டி- செப்டிக் பண்புகள் சருமத் துளைகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். லவங்கப்பட்டையில் உள்ள மூலக்கூறுகள் சரும நிறத்தையும், பொலிவையும் மேம்படுத்தும். லவங்கப்பட்டைத் தூளுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் முகத்தின் வசீகரம் அதிகரிக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருக்களால் உண்டாகும் வடுக்கள் ஆகியவற்றை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தக்கூடியவை.

அமுக்கிரா:

அமுக்கரா, அமுக்கிரி, அஸ்வகந்தா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த மூலிகையில், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பங்கல் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் கிருமித்தொற்றைத் தடுத்து, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அஸ்வகந்தா பொடி, இஞ்சி பொடி ஆகியவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமை அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com