'காமராஜர் தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது'

கல்வியில் மாணவர்கள் முன்னேற காமராஜர்தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது என்று கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
'காமராஜர் தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது'
Published on

புதுச்சேரி

கல்வியில் மாணவர்கள் முன்னேற காமராஜர்தான் காரணம் என்பதை சரித்திரம் மறக்காது என்று கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

மாணவர் நாள் விழா

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் மாணவர் நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்புயாற்றினர். சபாநாயகர் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

தொடர்ந்து பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

காமராஜர் மீது மரியாதை

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் கல்விதான் செல்வம் என்று நினைத்தார். அதனை புதுச்சேரி அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. 'பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை' என்ற பெயரிலேயே ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசு சார்பில் அரசு நிறுவனம், சாலை, மணி மண்டபம், கல்லூரி போன்றவைகள் அவர் பெயரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு தமிழகத்திலோ அல்லது காமராஜர் பிறந்த ஊரிலோ கூட கிடையாது. புதுச்சேரி அரசு காமராஜரின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

சரித்திரம் மறக்காது

நம் வாழ்க்கையில் அடிப்படை தேவை கல்வி தான். காமராஜர் அறிமுகப்படுத்திய 'இலவச மதிய உணவுத் திட்டத்தின்' மூலம் பெரும்பாலானோர் வாழ்வில் முன்னேறி பல சாதனைகளை படைத்துள்ளனர். அன்று பசியின் கொடுமையாலும், சீருடை கூட இல்லாமல் மாணவர்களால் பள்ளிக்கு வர முடியாத சூழல் நிலவி வந்தது. இன்று நமக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்து வருகிறது. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கி முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் காமராஜர் தான் என்பதை சரித்திரம் மறக்காது.

மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் சந்தேகங்களை தன்மையாக விளக்க வேண்டும். எல்லோரும் கல்வி அறிவோடு இருக்க வேண்டும் என்பதைத்தான் காமராஜர் விரும்பினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலை நிகழ்ச்சி

முன்னதாக காமராஜர் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து காமராஜர் மணிமண்டபத்தில் அரசு பள்ளிகள் சார்பில் புதுவை, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் பலர் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com