ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
Published on

பென்னாகரம்:

கனமழை

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து மொத்தம் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

28 ஆயிரம் கனஅடியாக

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.

நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நடைபாதையை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

இதனிடையே கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,091 கனஅடி தண்ணீர் என மொத்தம் 38 ஆயிரத்து 091 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com