

புதுச்சேரி
போக்குவரத்து விதியை மீறியதாக வெளிநாட்டுக்காரரிடம் கூகுள் பே மூலம் பணம் வசூலித்து ஊர்க்காவல் படை வீரர் மோசடி செய்துள்ளார்.
அபராதம்
புதுவை காவல்துறையில் பணிபுரியும் போலீசார், ஊர்க்காவல் படையினர் இரவு, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவர்கள் கையில் பணம் இல்லையென்றால் 'கூகுள் பே' செயலி மூலம் வசூலிக்கின்றனர். அந்த பணத்தை காவல்துறையின் கணக்கிற்கு அவர்கள் கொண்டு செல்வது கிடையாது.
தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என ஏதே ஒருவரது கூகுள் பே கணக்கில் பெற்ற அந்த பணத்தை சொந்தமாக அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு காவல்துறையில் மோசடி செய்தவர்கள் சமீபத்தில் சிலர் சிக்கி துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
வெளிநாட்டுக்காரரிடம்...
இந்தநிலையில் புதுவை கருவடிக்குப்பம் பகுதியிலும் இதேபோல வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் மோசடி நடந்துள்ளது. தற்போது அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தன்று நள்ளிரவு கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே சிலர் நின்று கொண்டு அந்த வழியாக வாகனத்தில் வந்த வெளிநாட்டுக்காரரை மடக்கி தாங்கள் போலீஸ் என்று கூறி அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவரிடம் அவமரியாதையாக நடந்துகொண்ட அவர்கள், போக்குவரத்து விதியை மீறியதாக கூறி குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதித்து அதை 'கூகுள் பே' மூலம் பெற்றுள்ளனர்.
போலீசில் புகார்
மறுநாள் காலையில் அந்த வெளிநாட்டுக்காரர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் தெரிவித்தார். அவர் பணம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, அந்த நபர் கருவடிக்குப்பம் பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரர் மற்றும் ஒருவருடன் சேர்ந்த இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளுடன் இணைந்து கொண்டு காவல்துறையினரே இதுபோன்று ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.