மழைக்கால வீட்டு வைத்தியங்கள்

மழைக்கால நோய்கள் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெற்றிலை, பூண்டு, இஞ்சி, துளசி, மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள், எலுமிச்சை, நெல்லி போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மழைக்கால வீட்டு வைத்தியங்கள்
Published on

ழைக்காலங்களில் கிருமித் தொற்று அதிகமாக இருக்கும் என்பதால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். இவற்றால் வயதானவர்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலத்தில் பயன்படும் வீட்டு வைத்தியங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. எதற்கெல்லாம் மருத்துவரை நாட வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால், ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் பலவீனமடையும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே மழைக்காலங்களில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

வெளி இடங்களில் உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, எளிதாக செரிக்கக்கூடிய உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வேகவைத்த காய்கறிகள், சூடான சூப் வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். கொழுப்பு நிறைந்த, மசாலா அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலத்தில் அசுத்தமான தண்ணீரின் மூலம் நோய்கள் எளிதாகப் பரவும். எனவே நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிரவைத்து குடிப்பதைவிட, வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீரை குடிப்பது சிறந்தது.

இளஞ்சூடான பாலில் டீஸ்பூன் மஞ்சள்தூள், டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து தினமும் பருகி வந்தால் சளித்தொல்லை அகலும். இனிப்பு தேவையெனில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி, அதில் கட்டிக் கற்பூரத்தைப் பொடித்துப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதனை குழந்தைகளின் மார்பு, நெற்றியில் தடவி வந்தால் மார்புச்சளி குறையும்.

சிறிதளவு சீரகம் மற்றும் கற்கண்டை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

மழைக்கால நோய்கள் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெற்றிலை, பூண்டு, இஞ்சி, துளசி, மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள், எலுமிச்சை, நெல்லி போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு சேர்த்துக் கரைத்து, தொண்டை நனையும்படி கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தொண்டைப் பகுதியில் கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

ஓமம் அல்லது துளசி சேர்த்து காய்ச்சிய வெந்நீரை மழைக்காலத்தில் குடித்தால் சளி, இருமல் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com