கீழுர் நினைவிடத்தில் சபாநாயகர், அமைச்சர் மரியாதை

புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கீழுர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
கீழுர் நினைவிடத்தில் சபாநாயகர், அமைச்சர் மரியாதை
Published on

வில்லியனூர்

புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கீழுர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

வாக்கெடுப்பு

பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன்பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழுர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழுரில் நிறுவப்பட்டுள்ளது.

மலர் தூவி மரியாதை

புதுச்சேரி அரசு இந்தியா அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக ஆண்டு தோறும் கீழுர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கீழூர் நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்துகொண்டு போலீஸ் மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் அங்குள்ள கொடி கம்பத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நூலகம் கட்டப்படும்

விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசுகையில், வருங்கால சந்ததியினர் புதுச்சேரி மாநிலத்தின் வரலாற்றையும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட இந்த இடத்தின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் இங்கு நூலகம் அமைக்க வேண்டும், புதுச் சேரியின் வரலாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் பேசுகையில், புதுச் சேரியில் அமைக்கப்பட்டுள்ள தியாக பெருஞ்சுவரில் இங்கு நடந்த வாக்கெடுப்பில் பங்குபெற்ற தியாகிகளின் பெயர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இப் பகுதியில் விரைவில் நூலகம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

விழாவில் தலைமை செயலர் ராஜூவர்மா, மாவட்ட கலெக்டர் வல்லவன், போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை, தியாகிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்கவில்லை

சட்டப்பூர்வ பரிமாற்று நாள் விழாவில் மாநில கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் பங்கேற்று கொடியேற்றுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமியும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com