அன்போடு அழைப்பேன்... அப்பாவோடு கலந்து விட்டார்- பிரபு உருக்கம்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, லதா மங்கேஷ்கரின் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.
அன்போடு அழைப்பேன்... அப்பாவோடு கலந்து விட்டார்- பிரபு உருக்கம்
Published on

லதா மங்கேஷ்கர் மரணம் தொடர்பாக திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, லதா மங்கேஷ்கரின் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.

எங்களது வீட்டில் ஒருவராகவே அத்தை லதா மங்கேஷ்கர் திகழ்ந்தார். நான் எப்போதும் அன்புடன் அவரை அத்தை என்றே அழைத்து வந்துள்ளேன். அவர் அப்பாவை அன்புடன் அண்ணா என்று வாய் நிறைய கூப்பிடுவார்.

இருவருக்கும் இடையே இருந்த சகோதர பாசத்தை அவ்வளவு எளிதாக விவரித்துவிட முடியாது. எங்களது வீட்டில் அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் லதா மங்கேஷ்கர் கலந்து கொண்டு இருக்கிறார்.

எனது மகன் விக்ரம் பிரபு திருமணத்திற்கு மட்டும் அவரால் நேரில் வர இயலவில்லை. வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அப்பா இறந்தபோது அவரால் உடல் நலக்குறைவால் நேரில் வர இயலவில்லை. 10 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்பா இல்லாத அன்னை இல்லத்தில் எங்களோடு துக்கத்தை பகிர்ந்து கொண்ட நாட்களை எப்போதும் மறக்க முடியாது. அப்பாவின் மரணத்திற்கு பிறகு கடவுள்களின் போட்டோவுடன் அப்பாவின் போட்டோவையும் எங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்பாவின் புகைப்படத்தை அனுப்பும்போது அதில், அண்ணா... அண்ணா என டைப் செய்து அனுப்புவதை வழக்கமாகவே அவர் வைத்திருந்தார்.

அவருடனான எங்கள் குடும்பத்தின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனதில் இருக்கும். அப்பாவுடன் அவரும் சென்று விண்ணுலகில் கலந்து விட்டார்.

இவ்வாறு பிரபு லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com