திருப்பூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது

திருப்பூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் பகல் நேரத்தில் வீதியில் நடமாட முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது
Published on

திருப்பூர்,

கோடை காலம் தொடங்கி விட்டதால் திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை 8 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. வீட்டில் இருந்தாலும் பகல் நேரத்தில் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பகல் நேரத்தில் சாலைகளில் செல்ல மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். அனல் காற்று வீசுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெயிலின் உக்கிரத்தை சமாளிக்கும் வகையில் இளநீர், சர்பத், மோர், கம்பங்கூழ், கரும்புச்சாறு குடித்து வருகிறார்கள். மேலும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதற்கு மக்கள் ஆர்வம் செலுத்தியதால் நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை மாநகரில் களைகட்டியுள்ளது. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரத்தில் வெளியில் சென்ற பெண்கள் குடை பிடித்தபடியும், இளம்பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடியபடியும் வெளியில் சென்றனர்.

திருப்பூரில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் நேற்று பகலில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். பல்வேறு வேலை காரணமாக வெளியில் சென்று வந்தவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். பகல் நேரத்தில் தான் வெயில் கொடுமை இப்படி என்றால், இரவிலும் வெப்பக்காற்று வீசி வருகிறது. வீடுகளில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாக உள்ளது. இதனால் வீடுகளின் ஜன்னல்களை திறந்து வைத்து பொதுமக்கள் தூங்குகிறார்கள். சிலர் மொட்டை மாடிக்கு கட்டில்களை கொண்டு போட்டு தூங்குகிறார்கள்.

கோடை வெயிலின் உச்சகட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் வருகிறது. அந்த காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே இந்த அளவில் வறுத்தெடுக்கும் வெயில், அக்னி நட்சத்திர காலத்தில் எப்படி இருக்குமா? என்று மக்கள் புலம்பி சென்றனர்.

இதுகுறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம் கூறும்போது, திருப்பூரில் 102 டிகிரி வெயில் பகல் நேரத்தில் பதிவாகியுள்ளது. இரவில் 79 டிகிரி வெப்பம் இருக்கும். இன்னும் ஒருவாரத்துக்கு இதே நிலை நீடிக்கும். மழைக்கு வாய்ப்பு குறைவு என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com