சித்தன்குடியில், குடோனை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து மதுபான குடோன்கள் மற்றும் மதுபான கடைகள், கள்ளு, சாராய கடைகளுக்கும் கலால் துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். இருப்பினும் புதுவையில் மதுபானம் விற்பனை திருட்டுத்தனமாக நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தாவரவியல் பூங்கா எதிரே உள்ள ஒரு தனியார் மதுபான குடோனில் சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்து பெட்டி பெட்டியாக மதுபானங்களை 2 பேர் கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு குடோனில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
புதுவை கதிர்காமம் பாரதி வீதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65). மதுபான கடை வைத்துள்ளார். இவருக்கு சித்தன்குடி 2-வது குறுக்கு தெருவில் மது குடோன் உள்ளது. அது சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த பின்பக்கத்தில் உள்ள கதவுக்கு அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு மது குடோனின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து கோரிமேடு போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

