வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு
Published on

காரைக்கால் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் விவசாயிகள், காரைக்காலுக்கு காவிரிநீர் கிடைக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மத்தியக் குழு வருகை

காரைக்கால் மாவட்டம் காவிரி ஆற்று பாசனத்தின் கடைமடை பகுதியாகும். பருவ மழை பொய்த்ததால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு காரைக்காலை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்தது. மேலும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பி வைத்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

அதனை மத்திய அரசு ஏற்றது. அதைத் தொடர்ந்து மத்திய வேளாண்துறை இணைச்செயலர் ராணி குமுதினி தலைமையில் 9 பேர்களைக் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு வந்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வறட்சி நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது.

பின்னர் அந்த குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் ஐதராபாத்தில் உள்ள எண்ணெய்வித்து பயிர்கள் இயக்குனரக இயக்குனர் பொன்னுசாமி தலைமையில், டெல்லியைச் சேர்ந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அமைச்சக கூடுதல் இயக்குனர் சந்தோஷ், கால்நடை அதிகாரி அனிரூபன்குஹா, கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பு செயலர் எஸ்.ஆர்.மீனா, நிதித்துறை (செலவினங்கள்) ஆலோசகர் தீனநாத் ஆகிய 5 பேர்களை கொண்ட குழு நேற்று காலை காரைக்காலுக்கு வருகை தந்தது.

வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு

அவர்களை மாவட்ட கலெக்டர் பார்த்திபன் வரவேற்றார். பின்னர் அந்த குழுவினர் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் கீழவெளி, திருவேட்டக்குடி, நெடுங்காடு கொம்யூன் புத்தக்குடி, திரு-பட்டினம் கொம்யூன் படுதார்கொல்லை ஆகிய வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று விவசாய நிலங்களை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்களிடம் விவசாயிகள் காவிரிநீர் வராததாலும், பருவமழை பொய்த்துப் போன காரணத்தினால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்த்து பயிரிட்ட பயிர்களும் தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் விட்டதாகவும், தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைநெல் போன்றவை உரியநேரத்தில் கிடைக்காததால் வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கி வந்து போட்டும் பலனில்லை என்றும், ஏக்கருக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்தும் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், காய்ந்து கருகிப்போன பயிர்களை விவசாயிகள் எடுத்து வந்து மத்தியக் குழுவினரிடம் காட்டினார்கள்.

காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததாக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான முறையான அரசு உத்தரவு சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லாததால் புதிதாக கடன்தர மறுக்கின்றனர். எனவே விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காரைக்காலுக்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காரைக்காலுக்கு ஆண்டுதோறும் 7 டி.எம்.சி. தண்ணீரை அரசு அதிகாரிகள் கேட்டு பெற்றுத்தர வேண்டும். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் முன்வைத்தனர்.

கால்நடைகள் பாதிப்பு

புத்தக்குடி பகுதியில் மத்தியக்குழு ஆய்வுசெய்தபோது, வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்கவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு மத்தியக்குழுவில் வந்திருந்த கால்நடை அதிகாரி அனுரூபன் குஹா மத்திய அரசு கால்நடைத்துறை மூலம் கால்நடைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது. அதை நீங்கள் பெறுவதில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என்று விவசாயிகள் பதிலளித்ததை தொடர்ந்து புதுச்சேரி அரசு மூலம் கோரிக்கை அனுப்பி வையுங்கள். நான் தேவையான உதவிகளை செய்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

பேட்டி

வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் மத்தியக்குழு அதிகாரி பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவின்பேரில் நாங்கள் இங்கு வந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டோம். விவசாயிகள் பலர் தங்களது குறைகளை எங்களிடம் தெரிவித்தனர். காவிரிநீர் கிடைக்க வும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு ஆய்வை முடித்துக் கொண்டு புதுச்சேரி சென்று முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் கலந்தாலோசனை செய்த பிறகு டெல்லி சென்று மத்திய அரசிடம் எங்களது அறிக்கையை தாக்கல் செய்வோம். அதன்பிறகு வறட்சி நிவாரணம் அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் பார்த்திபன், கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன், இணை வேளாண் இயக்குனர் முகமது தாசீர், துணை வேளாண் இயக்குனர் செந்தில் குமார், கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் லதா மங்கேஷ்கர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com