துபாயில், சைக்கிள் செல்லும் பாதைகளை தூய்மைப்படுத்த மின்சாரத்தால் இயங்கும் தானியங்கி வாகனம் அறிமுகம்

மின்சாரத்தால் இயங்கும் தானியங்கி வாகனம் துபாய் மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துபாயில், சைக்கிள் செல்லும் பாதைகளை தூய்மைப்படுத்த மின்சாரத்தால் இயங்கும் தானியங்கி வாகனம் அறிமுகம்
Published on

துபாய்,

துபாயில் சைக்கிள் செல்லும் பாதைகளை தூய்மைப்படுத்த மின்சாரத்தால் இயக்கப்படும் தானியங்கி வாகனங்களை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து துபாய் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் உலகின் முக்கியமான சுற்றுலா நகரமாக விளங்குகிறது. இதனால் துபாய்க்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நடைப்பயிற்சி செய்யும் இடங்கள், சைக்கிள் ஓட்டி செல்வதற்கான பிரத்யேகமான பாதைகள் இங்கு உள்ளது.

துபாயின் ஜுமைரா மற்றும் உம் சுகிம் பகுதியில் உள்ள கடற்கரை அருகில் சைக்கிள் ஓட்டி செல்வதற்கான பிரத்யேகமான பாதைகளை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் மாநகராட்சி ஊழியர்கள் காற்றின் காரணமாக கிடக்கும் மணலை அகற்றி தூய்மைப்படுத்தி வந்தனர்.

இந்த பணிகளை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், கார்பன் உமிழ்தலை தடுக்கும் வகையிலும் மின்சாரத்தால் இயங்கும் தானியங்கி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பாதை மிகவும் தூய்மையானதாகவும், பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தக்கூடிய வகையிலும் இருக்கும்.

இந்த தானியங்கி தூய்மைப்படுத்தும் வாகனம் 'ஸ்மார்ட்' முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பாதையை சிறப்பான வகையில் தூய்மைப்படுத்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வாகனம் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் போது யார் மீதும் மோதாமல் இருக்க உணரும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மனிதர்கள் வேலை செய்வதைவிட அதிகமான பணிகளை இந்த தானியங்கி வாகனம் செய்கிறது. ஒருமுறை இந்த வாகனத்தை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணி நேரம் இயங்கும் தன்மை கொண்டது. மேலும் வழக்கமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இது இயங்கும்.

ஏற்கனவே மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்ட 5 பெரிய வகை துப்புரவு எந்திரங்கள் எரிபொருளை பயன்படுத்தி இயங்கி வந்தது. இந்த எந்திரங்கள் தினமும் 2 ஆயிரத்து 250 கி.மீ. தொலைவுக்கு சாலைகளை தூய்மைப்படுத்தும் திறன் கொண்டவை. இதன் மூலம் சாலைகள், பொது பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தூய்மை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com