

கடையநல்லூர்,
கடையநல்லூரில், பன்றி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியானார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் ஓடைத் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் பொன்மணி(வயது 25). இவர் கேரள மாநிலம் புனலூரில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
அங்கு ஆஸ்பத்திரியில் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது, அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்குள்ள பன்றி காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பொன்மணி பரிதாபமாக இறந்தார். இறந்துபோன பொன்மணிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
தற்போது கேரளாவில் பன்றி காய்ச்சல் அதிகமாக உள்ளது. எனவே கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் ஆட்களை மாநில எல்லையில் பரிசோதனை செய்து பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.