கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரதினத்தன்று

தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண் மற்றும் 3 பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15-08-2022-ந் தேதியன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இணையதளம் மூலம்

இந்த விருதுக்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 10-05-2022 மாலை 4 மணி ஆகும். 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.3.2022 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.

கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது ஏப்ரல் 1.4.2021 முதல் 31.3.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள்

மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இவ்விருது தொடர்பாக கூடுதல் விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவ்விருதை பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com