

கோலார் தங்கவயல்
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோலார் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தொடர்ந்து 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தாழ்வான இடங்களில் இருந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்த மழைநீரால் வீடுகளில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாத்திரங்கள் மற்றும் மின்மோட்டார்களை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல கோலார், முல்பாகல், சீனிவாசப்பூர் தாலுகாவில் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
கோலார் தங்கவயலில் கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். அதேபோல பெரும்பாலான இடங்களில் கழிவு நீருடன் மழைநீர் சேர்ந்து, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
இதில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே நகரசபை நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.