உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் - ஜி.கே.மணி பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் என அந்த கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி பவானியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் - ஜி.கே.மணி பேட்டி
Published on

பவானி,

பா.ம.க. ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பவானியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பவானி, கோபி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் அந்த கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும். தமிழ்நாட்டில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும்.

டல்டா மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில, மத்திய அரசுகள் அறிவிக்க வேண்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை விரைந்து நிறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டி ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்ட முறையாக கடைப்பிடிக்க வண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான காலிப்பணி இடங்களில் இதர வகுப்பினரை நியமித்து பணி நிரவல் செய்யக்கூடாது. ஆனால் அவ்வாறு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடி ஆகும். காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்தின் கழிவுகள் கலக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் அதிக அளவில் மாசு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், மு.வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com