

மாமல்லபுரம்,
பின்லாந்து நாட்டை சேர்ந்த 29 வயதான ஒரு பெண், ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்காக ஒரு மாதத்திற்கு முன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அவர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேளம்பாக்கம் சென்ற பின்லாந்து பெண், பின்பு ராஜீவ்காந்தி சாலை வழியாக ஒரு டாடாமேஜிக் ஷேர் ஆட்டோவில் மாமல்லபுரம் பூஞ்சேரி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பயணிகளை பூஞ்சேரி பைபாஸ் சாலையில் ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டார்.
வண்டியில் வெளிநாட்டு பெண் மட்டுமே இருந்தார். பிறகு பூஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவை ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரத்தில் நிற்கவைத்து டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக அந்த பெண்ணிடம் பொய்யான தகவலை கூறி டிரைவர் நாடகமாடினார்.
பிறகு திடீரென ஆட்டோவுக்குள் புகுந்த ஆட்டோ டிரைவர், அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். பிறகு அவரை அப்பெண் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி மாமல்லபுரம் வந்தார். உடனடியாக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் செய்தார். பிறகு மாமல்லபுரம் காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அப்பெண் புகார் செய்தார்.
குற்றவாளியை பிடிக்கும் வரை இச்சம்பவம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருக்க காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதால் போலீசார் இவ்வழக்கை மிகவும் ரகசியமாக கையாண்டு வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பட்டிபுலம் சவுக்கு தோப்பு பகுதியில் ஜெர்மன் நாட்டு பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நேரத்தில், பின்லாந்து நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் போலீசாருக்கு மிகுந்த நெருக்கடியையும், தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது.
டாடாடேஜிக் ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று ரகசிய விசாரணை செய்து வருகின்றனர்.