நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் காணிக்கை பணத்தை திருடியவர் கைது

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில், காணிக்கை பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் காணிக்கை பணத்தை திருடியவர் கைது
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஆலயத்தில் புனித சவேரியார் திருப்பண்டம், சவேரியார் வழிபட்ட ஆரோபன அன்னை சிற்றாலயம் உள்ளிட்டவை அமையப்பெற்று உள்ளது. ஆரோபன அன்னை சிற்றாலயம் உள்ள இடத்தில் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம். இதற்காக அந்த இடம் சற்று பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யாரும் உள்ளே செல்ல முடியாதபடி அந்த இடத்தை சுற்றிலும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டு உள்ளது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணமானது, தினமும் இரவில் எண்ணப்பட்டு பங்கு பேரவை ஊழியர்களால் எடுத்து செல்லப்படுவது வழக்கம்.

5ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு ஆரோபன அன்னை சிற்றாலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. அதன்பின்னரும், பக்தர்கள் சிலர் காணிக்கை பணம் செலுத்தியிருந்தனர்.

இதற்கிடையே, ஆலய கதவை பூட்டிவிட்டு பங்கு பணியாளர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் அனைவரும் சென்றுவிட்டனர்.

வழக்கம் போல், நேற்று அதிகாலை 4.45 மணிக்கு ஆலயத்தை நிர்வாகி ஒருவர் திறந்தார். அப்போது ஆரோபன அன்னை சிற்றாலயம் உள்ள இடத்தில் இருந்து சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமி ஒருவன் சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை திருடிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பேராலய பங்கு பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்தபோலீசார், மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேந்தமரத்தை சேர்ந்த பீட்டர் (வயது 59) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த காணிக்கை பணம் 640ஐ மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com