

கள்ளக்குறிச்சி
கலந்துரையாடல் நிகழ்ச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. தனியார் பள்ளி கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சி அகன்ற திரையில் ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தமிழ்நாடு மின்சார வாரிய கள்ளக்குறிச்சி மேற்பார்வை மின் பொறியாளர் முருகேசன், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன், சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன், திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ராஜாராம், உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் சர்தார், நிர்வாகப்பொறியாளர் தமிழ்ச்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் அருளாளன், கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர்கள் அருள்சாமி, சுரேஷ்குமார், உதவி மின்பொறியாளர் நவநீதகிருஷ்ணன், இளமின் பொறியாளர் அழகன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
6,358 பேருக்கு மின் இணைப்பு
ஒரு லட்சம் புதிய இலவச உழவர் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் 6,358 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 ஆயிரத்து 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. மேலும் சின்னசேலம், சங்கராபுரம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடம் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சியை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.