கள்ளக்குறிச்சியில் அ தி மு க உள்கட்சி தேர்தலில் திடீர் மோதல் நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் அ தி மு க உள்கட்சி தேர்தலில் கட்சியினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் நாற்காலியை தூக்கி வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சியில் அ தி மு க உள்கட்சி தேர்தலில் திடீர் மோதல் நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
Published on

கள்ளக்குறிச்சி

உள்கட்சி தேர்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான உள்கட்சி தேர்தல் கள்ளக்குறிச்சி மாடூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இதில் மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுல்ராஜிடம் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு தற்போதைய ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிட மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விருப்ப மனு கேட்டார். ஆனால் மனு கொடுக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தனக்கு உடனடியாக மனு தர வேண்டும் என்று கூறி அங்கிருந்த கட்சிக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தேவேந்திரன் தரப்பினருக்கும், வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது கட்சியினர் சிலர் நாற்காலியை தூக்கி வீச முயன்றனர். அதேபோல் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு தற்போதைய ஒன்றிய செயலாளர் ராஜசேகர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்காக கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் விருப்பமனு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளங்கோவன் தரப்பினருக்கும். ராஜசேகர் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்களால் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனைவருக்கும் வாய்ப்பு

இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் குமரகுரு போட்டியிட விருப்பம் உள்ள அனைவருக்கும் விருப்ப மனு வழங்கப் படும். விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றார். இதையடுத்து அமைதி அடைந்த கட்சியினர் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உள்கட்சி தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com